மகா சிவராத்திரி மகிமை
மகா சிவராத்திரி மகிமை
sitharjothidar@gmail.com 7–3–2016 அன்று மகா சிவராத்திரிமாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, நித்திய சிவராத்திரி என்று பல உள்ளன. இதில் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் மகிமை பற்றி நந்தி தேவர் உபதேசம் செய்ததன் காரணமாக, முருகப்பெருமான், சூரியன், இந்திரன், மன்மதன், எமன், சந்திரன், அக்னி, குபேரன் முதலானோர் இந்நாளில் விரதம் மேற்கொண்டு வரங்களை பெற்றுள்ளனர்.இதே நன்னாளில் விஷ்ணு பகவான், சிவபெருமானை நோக்கி தவம் செய்து சக்ராயுதத்தையும், லட்சுமிதேவியையும் பெற்றார் என்றும், பிரம்மதேவர் விரதம் இருந்து சரஸ்வதி தேவியை பெற்றார் என்றும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று சிதம்பரம் வெள்ளியம்பலத்தில் ராஜசேகர பாண்டியன், சிவபெருமானை நோக்கி நான்கு காலமும் விசேஷ பூஜை செய்து ஆடிடும் பெருமானை, கால் மாறி ஆடச் செய்து பரவசம் அடைந்ததாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.
இரவு நேர பூஜை
மகா சிவராத்திரி என்றால், அன்றைய தினம் கண் உறங்காமல் விழித்திருக்க வேண்டும் என்பதே அனைவருக்கும் தெரிந்த விரத முறையாக இருக்கிறது. மகா சிவராத்திரி அன்று விழித்திருக்க வேண்டும்தான். ஆனால் அதற்காக மேற்கொள்ளும் முறை பக்தி சார்ந்ததாக இருக்க வேண்டும். கண் விழித்து இருக்க வேண்டும் என்பதற்காக விடிய விடிய டி.வி.யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியை பார்த்து பேசி சிரித்தபடியும், சீட்டாட்டம் போன்ற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு பக்தியை கெடுத்துவிடக்கூடாது. இவ்வாறு செய்வதால் மகா சிவராத்திரி யின் பலனை பெற முடியாது.முறையாக வழிபட்டால் முக்தி
மகாசிவராத்திரி விரதத்தை மேற்கொள்பவர்கள், அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று, ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, சதுர்த்தசியில் உபவாசம் இருந்து தூக்கம் களைந்து, நான்கு யாமங்களிலும், சிவபெருமானை பூஜித்து வழிபட்டு, மறுதினம் அடியார்களுக்கும், பிராமணர் களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். அதன் மூலம் முக்தியை பெறலாம். முக்தி அடைய விரும்பும் அனைவரும், மகாசிவராத்திரி விரதம் ஒன்றை மட்டும் முறையாக, 24 ஆண்டுகள் செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களுடன், சிவகதியையும் அடைவார்கள்.
பெறுவதற்கு அரியதான மனிதப்பிறவியை பெற்றிருக்கும் நாம், இறைவனை தொழும் விரதங்களை, அவற்றின் உண்மை கருத்துக்களை உணர்ந்து அதன்வழி நின்று விரதத்தை கடைப்பிடித்து முழுப்பயனையும் அடைய வேண்டும்.
--தினத்தந்தி
Comments
Post a Comment